துவண்டு போனவர்களைத் துளிர்த்தெழச் செய்யும் தன்னம்பிக்கை வளர்க்கும் வலைபூ

Friday, November 18, 2011

வீழ்வேனேயாகினும் விடப்போவதில்லை

சரித்திரமே காத்திரு... சாவே வா...
மரணத்தைப் பொருட்படுத்தாது
சிகரத்தின் விளிம்பில்
தொற்றிக்கொண்டு நிற்கிறேன்.
விழுந்தால் விதையாவேன்.
எழுந்தால் கதையாவேன்.

காரியத்தில் உறுதி வேண்டும் என்கிற எண்ணம்
நெஞ்சில் கனன்றுகொண்டிருப்பதால்
கரணந் தவறுதலை நான்
கருத்தில் கொள்ளவில்லை.

அச்சுறுத்தும் ஆழத்தைக் கண்டு
புன்னகைத்துவிட்டேன்.
விரல் நுனியில் காத்திருக்கும்
வெற்றிக்கான முயற்சியில்
விடாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறேன் - இங்கெனக்கு
சாவும், சாதனையும்
அக்கம்பக்கத்தில். . .
விட்டால் சாவு,
தொட்டால் சாதனை

மயிரிழையில் உயிர்தப்பியே தீரவேண்டும்.
காரணம் எனக்கு வேண்டியது வெற்றி மட்டுமல்ல
கடந்துவந்த சோதனைகளுக்கும்,
அடிபட்ட ரணங்களுக்கும்,
சந்தித்த போராட்டங்களுக்குமான விடிவு.

முடியவே முடியாது என்று
முடிவாய்ச் சொன்னவர்களுக்கும்,
பைத்தியக்காரன் என்று
பரிகாசம் செய்தவர்களுக்கும்,
ஏனிந்த வெட்டி வேலையென
எள்ளி நகையாடியவர்களுக்குமான பதில்.

ஊக்கம் தந்தவர்களுக்கும்,
உடன் வந்து வழியனுப்பியவர்களுக்கும்,
கண்துயிலாது காத்திருப்பவர்களுக்குமான நம்பிக்கை.

கடைநிலை நொடிகள்.
உடலெல்லாம் வியர்வை
வியிறெறியப் பசி.
மூச்சை உண்டபடி
உயிர்பிடித்துக்கொண்டிருக்கிறேன்.
ஆயிரமடிகளின் உயர்ந்த வெளியில்
இதயத்தின் துடிப்பொன்று தான்
இடைவிடாமல் கேட்கும் ஒலி.

இந்தக் கணத்தைச் சந்திப்பேன் என்று
தெரிந்தே தான் துணிந்து வந்தேன்.
எக்கிப் பிடித்தால் என்ன ஆகுமோ தெரியாது.

நெஞ்சுரத்தோடு தொற்றிக்கொண்டிருக்கிறேன்.
சரித்திரமே காத்திரு. . .
சாவே வா. . .
உன்னைச் சாகடிக்க
எனக்கு இன்றோர் சந்தர்ப்பம்.
கர்ஜித்தபடி முன்னெழுந்துவிட்டேன். . .
நெஞ்சுரத்துடன்,
-தமிழ் வசந்தன்
 
பிரசுரிப்பதற்கு முன்புவரை பார்வையாளர்களின் எண்ணிக்கை: 210

Monday, October 31, 2011

ஆமாம். நானுமோர் அநாதை!

நாம் துவக்கமாய் இருக்கிறோம். துவண்டுவிடாதிருங்கள்!
ஆம். நான் அநாதை தான். ஆனால்,
அநாதை எனப்படுவது ஒரு வாய்ப்பு.
அநாதை எனப்படுவது ஒரு ஆயுதம்.
அநாதை எனப்படுவது ஒரு சவால்.
அநாதை எனப்படுவது ஒரு போராட்டம்.
அநாதை எனப்படுவது ஒரு சரித்திரம்.
அநாதை எனப்படுவது ஒரு தகுதி.
அநாதை எனப்படுவது ஒரு கௌரவம்.
அநாதை எனப்படுவது ஒரு சக்தி.
அநாதை எனப்படுவது ஒரு யுக்தி.
அநாதை எனப்படுவது ஒரு சுதந்திரம்.
அநாதை எனப்படுவது ஒரு வரம்.
அநாதை எனப்படுவது ஒரு பாக்கியம்.
அநாதை எனப்படுவது ஒரு கண்ணியம்.

தந்தை, தாய் பெயர் தெரியாத அநாதைகளாக இருந்தால் அவர்கள் தான் இனி வரப்போகும் அவரின் தலைமுறைகள் எல்லாவற்றிற்குமான குலதெய்வம்.

அவரால் கட்டமைக்கப்படும் சாம்ராஜ்ஜியங்கள் முழுமைக்கும் அவரே முழுமையான காரணகர்த்தா. அவற்றிலிருந்து வேர்விடும் கிளைகள் யாவினுக்கும் அவரே சுயம்பு.

சொந்த, பந்தங்களுக்கான் ஆசாபாசங்கள் கிடைக்கப்பெறாது என்பது ஒரு குறை தான். இருந்தாலும் திருமணம் அதை நிவர்த்தி செய்துவிடும். இவற்றையெல்லாம் திருமணம் ஆகும் வரை பொறுத்துக்கொள்வது கடினமான காரியமென்றாலும், இயன்ற ஒன்றுதான்.

ஆசா பாசங்களைப் பொறுத்துக்கொண்டு, சமூகத்திற்கான சில சட்டதிட்டங்களுக்கு மட்டும் உடன்பட்டுக்கொண்டு, குறிக்கோளை அடைவதற்குக் கிடைத்திருக்கிற அநாதை என்கிற சுதந்திரத்தை மட்டும் முறையாகப் பயன்படுத்திக்கொண்டுவிட்டால், சொந்தங்கள் தானாக உருவாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றல்ல. ஆனால், நாம் சரித்திரம் செய்திருப்போம். வரலாறு நம்மை ஒரு போதும் மறவாமல் நினைவு கூறும். இது குறிப்பிடத்தக்க ஒன்றல்லவா.

குடும்ப சுக துக்கங்களுக்குள் உழன்று கொண்டிருக்கிறவர்களுக்குக் கிடைத்திராத வாய்ப்பு, அநாதைகளான நமக்குக் கிடைத்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு குறை உண்டு. நாம் "சொந்தபந்தங்கள் இல்லையே!" என வருத்தப்படுகிறோம். அவர்கள் "ஏன் தான் சொந்தபந்தங்கள் என்றெல்லாம் இருக்கின்றதோ?" என்று உழன்றுகொண்டிருக்கிறார்கள். ஆக, சாதனை செய்பவர்களுக்கும், சாமானியருக்கும் பிரச்சனை உண்டு. நாம் சாதிக்கறவர்களா, இல்லையா என்பது மட்டுமே கேள்வி. அநாதை என்கிற ஒற்றை வார்த்தை மட்டுந்தான் அநாதைகளுக்கான மன உழைச்சல். கொஞ்சம் அழுத்தமானது தான் என்றாலும், எந்த நேரத்திலும், சொந்தங்களுக்கு மத்தியில் வாழ்வெல்லாம் பல உழைச்சல்களுக்கு ஆளாக வேண்டியதில்லை. அந்தவகையில் அநாதை எனப்படுவது ஒரு பாக்கியம்.

வாழ்வை விருப்பம் போல் கட்டமைத்துக்கொள்ள முடிவது தான், நேர்மையான வழியில் தன்னை உலகில் நிலைநிறுத்திக்கொள்வதற்கு ஒரு புத்திசாலித்தனமான அநாதைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சவால். போராட்டக்களம் சாதிப்பதில் இருக்கின்றதென்றாலும், அந்தக்களத்தையும் கட்டமைக்கும் சுதந்திரமும், வல்லமையும், எல்லையற்ற கால அவகாசமும் அநாதைகளுக்குக் கிடைத்திருக்கும் வரம். இது எவருக்குமே கிடைக்கப்பெறாத தனிப்பெருந்தகுதி. இப்படியொரு தகுதியை அமையப்பெருகிறவர்கள் இறைவனின் அருள் பெற்றவர்களாகத்தானே இருக்கமுடியும். ஆக, அநாதை எனப்படுவது ஒரு வரம்.

எல்லோரும் இருக்கிற போது, எல்லோரைப் போலவுமான ஒரு வாழ்வை, எல்லோரின் துணை கொண்டும் பெற்றுக்கொண்டு, நூற்றில்லொன்றாக வாழ்ந்துவிடுவது எல்லோரும் செய்யக்கூடியது தான். எவருமே இல்லாமல், தான் வரும்பிய வாழ்வை விரும்பியபடியே கட்டமைத்து, தனக்கென்று ஓர் தனித்துவமான பாதையை வகுத்துக்கொண்டு, எவருமே இதுவரை கண்டிராத, முற்றிலும் தன்னால் மட்டுமே உருவாக்கப்பட்ட, புதுமையானதொரு சமூக முறைமையை உலகத்துக்கே அறிமுகம் செய்து, உலகம் உள்ளமட்டும் அழியாதொரு முத்திரையாய் இருந்துவிட்டுப் போவது தானே சரித்திரம். தன்காலத்தோடு மட்டுமன்றி தனக்குக் கீழ் தன் தலைமுறைக்கும் நல்லதோர் வழிகாட்டியாகத் தன்னைச் செதுக்கிக்கொண்டு, ஒழுக்கத்தில், நீதியில், நேர்மையில் முன்னுதாரணமாகத் திகழும்படி வாழ்ந்து காட்டுவது தானே வாழ்வதற்கான பொருள். இனிவரும் நம் தலைமுறைகள் இப்படியானதொரு வாழ்வை, சமூகத்தை, நிர்மாணித்த கண்ணியமுள்ள தன்னிகரற்ற மனிதராய், நம்மைப் பார்க்கட்டும். ஆம். அநாதை எனப்படுவது ஒரு கண்ணியம்.

வைக்கிற ஒவ்வொரு அடியும் அபாயகரமானதாக்க் கூட இருக்கலாம். ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகள் நம்மை மட்டும் தானே பாதிக்கப்போகிறது. பிறருக்குக் கிடைக்குமா இப்படியொரு தகுதி! நாம் பிறருக்குத் துன்பம் விளைவிக்கப்போவதில்லை. ஆபத்துக்கு அஞ்சாதவர்கள் தான் சாதனை நாயகர்களாக வரலாற்றில் இடம்பிடிக்கிறார்கள். மற்றவர்கள் செய்ய அஞ்சும், மற்றவர்கள் கேட்க அஞ்சும், மற்றவர்கள் எண்ணிப்பார்க்க்க் கூட அஞ்சிய காரியங்களைத் துணிந்து நடத்திக்காட்டி வென்றவர்கள் தான், நம் பாடப்புத்தகங்களிலும், ஆய்வுக்கட்டுரைகளிலும், சரித்திரக்குறிப்புகளிலும், கல்வெட்டுக்களிலும், அடையாளக்குறிப்புகளிலும், சிலைகளாகவும், ஓவியங்களாகவும், அருங்காட்சியகங்களிலும் குறிப்பிடத்தக்கவர்களாய் காலங்காலமாய் நீக்கமற இடம்பிடித்திருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்திய கண்ணாடிகளும், செருப்புகளும், கிழித்துத் தூக்கியெறிந்த குப்பைக் காகிதங்களும் கூட, அவர்களின் காலங்களுக்குப் பிறகும் பல கோடிகளுக்கு ஏலம் போகின்றன. இவற்றையெல்லாம் செய்துகாட்டுவதற்கு அநாதை என்கிற தகுதி நமக்குக்கிடைத்திருக்கிறது. வேறெவருக்குமே இல்லாத தகுதி, எதையும் துணிந்து செய்ய கிடைத்திருக்கிற தகுதி. நம்மிடம் அபகிரித்துச் செல்ல ஏதுமில்லை. நம்மை மிரட்ட, அடிபணிய வைக்க நம்மைச் சார்ந்திருப்பவர்கள் யாருமில்லை. இருக்கும்வரை லட்சியத்திற்காக வாழ்ந்துவிட்டு, லட்சியத்திற்காகவே நம் உயிரையும் அர்பணிப்போமேயானால் உலகை மாற்றிக்காட்ட வைத்த முதல் அடி, நம் முன்னெடுத்துவைத்த அடியாக இருக்கும். அதை இந்த உலகம் உள்ள்ளவும் நினைவில் கொள்ளும். இறந்தாலும் வாழலாம். நம் பெயரால் நம்மைப்போன்ற சாதனையாளர்கள் விருது வழங்கி கௌரவிக்க்கப்படலாம். இப்போது தெரிந்துகொள்கிறீர்களா. அநாதை எனப்படுவது ஒரு கௌரவம்.

"அடித்துப்போட்டால் ஏனென்று கேட்க ஆளில்லாத அநாதை!" என்று பரிகாசிப்பவர்களுக்குச் சொல்லுங்கள், தட்டிக்கேட்டால் நம் குரல் உலகைத் திரும்பிப்பார்க்கச் செய்யுமென்று! விழுகிற ஒவ்வொரு அடியும் கேள்விக்கனைகளாக மாறி சரமாரியாய் பொழிந்து தாக்குமென்று! அவர்களின் ஆங்காரத்தை உலகம் கண்டுகொண்டிருக்குமென்பதை, அவர்களுக்குத் தைரியத்தோடு அறிவுறுத்துங்கள். நிராயுதபாணியாய் அதிகார மையங்களை எதிர்த்து நாம் எச்சரிக்கை செய்ய முடியுமென்றால், அத்தகைய தைரியத்தை நமக்கு கொடுத்திருப்பது அநாதை என்கிற தகுதி தான். ஆம். இது அநாதைகளுக்கென்றே பிரத்தியேகமாய் கிடைத்திருக்கிற பொக்கிஷம். அநாதை எனப்படுவது ஒரு சக்தி. அநாதை எனப்படுவது ஒரு யுக்தி. அநாதை எனப்படுவது ஒரு ஆயுதம். அநாதை எனப்படுது ஒரு சவால்.

ஏகாதிபத்தியமும், முதலாளித்துவமும், பேரினவாதமும் ஆண்டாண்டு காலமாய் சாமானிய சமுதாயத்திற்கு எதிராய் சூதிழைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த உலகில் அதிகாரிகளும், ஆட்சியாளர்களும், முதலாளிகளும் குறைவுதான். சாமானியர்களே அதிகம். அந்தச் சாமானியர்களுள் ஒருவராக இருந்து, அவர்களுக்காக துணிவுடன் போரிடுகின்ற நாம் வெகு காலம் நீடித்திருக்க இயலாது. வாதத்திற்கு பதிலுரைக்கத் தகுதியற்று, குற்றத்தை உணர்ந்து தன்னை மாற்றிக்கொள்ளும் மனப்பக்குவமும் இல்லாத போது, சூழ்ச்சியாளர்களின் சதுரங்கத்தில் நாம் கொலைக்கு ஆளாகலாம். நம்மோடு ஆட்டம் முடிந்துவிட்டதாக அவர்கள் எக்காளமிடலாம். ஆனால், நம் அழிவிலிருந்து தான் புதிய வராலாறு துவங்கும். நம் மரணம் உலகை விழிப்புகொள்ள வைக்கும். அவர்களுக்காக துணிந்து போராடிய நம் உயிர் பறக்கப்பட்டதால் தாங்கொணாத கோபம், மக்களின் எழுச்சியாய் மாறி அதிகார வர்க்கங்களை அடியோடு வேரறுத்துப்போடும். சமத்துவம் பிறக்கும். நம்மை வரலாறு நினைவில் கொள்ளும். நாம் மடிகிறோம் தான். ஆனால், நம் பிறப்பிற்குப் பொருளிருக்கும். இறவாப் புகழிருக்கும். ஆம். அநாதை எனப்படுவது ஒரு போராட்டம். அநாதை எனப்படுவது ஒரு சரித்திரம். ஆகையால், மதிப்பிற்குரிய அநாதையாளர்களே, நாம் துவக்கமாய் இருக்கிறோம். துவண்டுவிடாமல் இருங்கள்!
உங்களில் ஒருவன்
-தமிழ் வசந்தன்

Monday, October 17, 2011

நெஞ்சுரம் மட்டுமே முக்கியம்



கடந்துபோகவேண்டியவற்றைக் கடத்தியாகவேண்டும். இருக்கவேண்டியவற்றைக் கடந்துவிடாதபடி நிறுத்தியாகவேண்டும்.



நீங்கள் இப்போது கஷ்டப்படுகிறீர்கள். கவலைப்படாதீர்கள். இதுவும் கடந்துபோம் என்று என்னிடம் ஒருவர் ஆறுதல் சொன்னார். நான் கேட்டேன் - இது கடந்து போகும் - சரி.

1. அதற்குமுன் நான் போய்விட்டால். . .
2. இது துன்பம் - கடந்துபோவது இருக்கட்டும். வருவதும் துன்பமாகவே இருக்குமானால் இது கடந்து போவதால் என்ன பயன்.
3. இனி இன்பம் வருமானால் அதுவும் கடந்து போய்விட்டால், கடந்துபோவதெல்லாம் நல்லதற்கல்லவே.

கடந்துபோகவேண்டியவற்றைக் கடத்தியாகவேண்டும். இருக்கவேண்டியவற்றைக் கடந்துவிடாதபடி நிறுத்தியாகவேண்டும்.
ஆறுதல் சொல்பவர்கள் எங்களை எழுந்து நடமாட வைக்கலாம். நீங்களே மூலையில் அமர்த்திச் செல்லலாமா என்று கேட்டேன். இனி எவரும் இதுவும் கடந்துபோம் என்ற வார்த்தைகளைச் சொன்னால் ஆறுதலடைந்துவிடுவார்கள் என்று எண்ணிவிடாதீர்கள்.

அறிவு, திறமை, உழைப்பு, விடாமுயற்சி, வைராக்கியம் - இதில் எதையும் விடாமல் உங்கள் இலட்சியத்தை நோக்கி இடைவிடாது பயணியுங்கள். இதை உங்களால் விரைவில் கடந்துவிட முடியும். கடந்துவிடும் என்று இருந்துவிட்டால், விடிந்தாலும் வாழ்வு இருண்டபடியே தான் கிடக்கும். கடத்திவிடுவேன் என்று தைரியத்தோடு நோக்கம் மாறாமல் வாழ்க்கையை நடத்திச் சென்றால், இருட்டில் அதிக நேரம் இருக்கத்தேவையில்லை. ஒளிநிரம்பிய வாழ்வை நீங்களே செய்ய முடியும். இருண்மையை மாற்றலாம். வறுமையை மாற்றலாம்.

போராடிய தழும்புகளும், உருவாக்கிய சரித்திரங்களும் இறந்தாலும் நம்மை மறவாமல் நினைவுகூறும். இழப்பேன் என்றாலும் நேர்மை பிறழாத பிடிவாதமும், இறப்பேன் என்றாலும் கொள்கை தவறாத வைராக்கியமும் என்றும் இருக்கவேண்டும். என்ன நேர்ந்தாலும் மாற்றிக்காட்டும் வரை துவண்டுவிடாமல் போராடுவதற்கு நெஞ்சுரம் மட்டுமே முக்கியம் என்று சொல்லிப்பாருங்கள். இனி அவருக்கு நீங்கள் ஆறுதல் கூறவேண்டியதன் அவசியமே இருக்காது.

-தமிழ் வசந்தன்